பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்று வருட டிப்ளமோ படிப்பிற்கான மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்டம், கடத்தூரில் அமைந்துள்ள அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்று வருட டிப்ளமோ படிப்பிற்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள் முதலாம் ஆண்டிலும், பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ. முடித்த மாணவர்கள் நேரடியாக இரண்டாமாண்டிலும் சேரலாம். அதற்கான விண்ணப்பத்தை http://www.tnpoly.com/ என்ற இணையதளம் வாயிலாகவும், உரிய ஆவணங்களுடன் நேரடியாக கல்லூரிக்கு சென்றும் பதிவேற்றம் செய்யலாம்.
இக்கல்லூரியில் நவீன ஆய்வகங்கள் மற்றும் வகுப்பறைகள், மாணவ, மாணவிகளுக்கென தனித்தனியாக தங்கும் விடுதிகள் உள்ளன. மேலும், மிக குறைந்த கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவதுடன், தகுதியுள்ள மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை, விலையில்லா மடிக்கணினி, இலவச பஸ் பாஸ் வசதி ஆகியவை பெற்று வழங்கப்படுகின்றன. சிறப்பு கல்வி உதவித் தொகையாக மாணவிகளுக்கு ஆண்டு தோறும் ரூ.50,000 மற்றும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு ஆண்டு தோறும் ரூ.50,000 பெற்று வழங்கப்படுகிறது.
மேலும், புதிய திட்டங்களின் மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதுடன், ஒவ்வாரு ஆண்டும் பட்டயப்படிப்பு முடித்த மாணவ, மாணவியர்களுக்கு பல்வேறு நிறுவனங்களில் நல்ல ஊதியத்துடன் வேலைவாய்ப்பும் பெற்று தரப்படுகிறது. இதனை பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. விண்ணப்பம் பதிவேற்றம் செய்ய இறுதி நாள் : 08.07.2022 மேலும், தொடர்புக்கு 04346 – 265355, 9488386219, 9150206675, 9944627787 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்.