நடிகர் அஜித்தை பொறுத்தவரைக்கும் அவர் சினிமாவில் வந்த காலத்தில் இருந்தே பொதுவாக பெரிய அளவுக்கு ஆடம்பரத்தையும், புகழையும் விரும்பாதவர். தன்னுடைய படங்களில் மாஸ் காட்டுவதற்காக அரசியல் பேசாத ஒரே நடிகர் என்று கூட இவரை சொல்லலாம். படத்தின் பிரமோஷன், பேட்டி, பொது நிகழ்ச்சிகள் மற்றும் எந்த ஒரு அரசியல் நிகழ்வுகளிலும் இவர் கலந்து கொள்வதில்லை. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில், ஒரு விழாவின் போது நடிகர்களை இது போன்ற நிகழ்வுகளுக்கு அழைப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள் என்றும், நாங்கள் எங்கள் வேலையை மட்டும் செய்ய விரும்புகிறோம் என்றும் ரொம்பவும் தைரியமாக சொன்னவர் அஜித்.
ஜெயலலிதாவுக்கு ரொம்ப பிடித்த நடிகர் அஜித்குமார் தானாம். அஜித்தை எப்படியாவது தன்னுடைய வாரிசாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்று கூட ஜெயலலிதா விரும்பினாராம். ஆனால் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டதாக கூட செய்திகள் வெளியாகி இருக்கின்றன. அந்த அளவுக்கு தன்னை எந்த ஒரு அரசியலும் சாராத தனி மனிதனாக காட்டிக் கொள்ளவே அஜித் விரும்பினார். அப்படி இருக்கையில் சமீபத்தில் அஜித் குமார் ஒரு அரசியல் தலைவருக்கு வாழ்த்து சொல்லி இருக்கும் செய்தி தான் பேசுபொருளாக மாறியுள்ளது.
தமிழகத்தின் பெரும்பான்மை கட்சிகளில் ஒன்றான அதிமுக-வின் பொதுச்செயலாளராக உச்சநீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டிருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு தான் நடிகர் அஜித் வாழ்த்து சொல்லி இருக்கிறார். அஜித்தின் அப்பா சமீபத்தில் தவறிவிட்டார். அதற்கு ஆறுதல் சொல்வதற்கு தான் எடப்பாடி பழனிசாமி அஜித்துக்கு போன் செய்திருக்கிறார். அந்த உரையாடலின் போது தான், அஜித் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்துக்கள் சொல்லி இருக்கிறார். மேலும், இபிஎஸ் சார்பில் முக்கியமான அரசியல் தலைவர்கள் அஜித்தின் திருவான்மியூர் வீட்டுக்கு நேரில் சென்று அவருக்கு ஆறுதல் சொல்லி இருக்கின்றனர். தற்போது இந்த நிகழ்வு தான் தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.