இந்தியாவில் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நாளை முதல் வங்கிகளில் கொடுத்து ரூ.2000 நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என ஆர்பிஐ தெரிவித்துள்ளது. இதற்கிடையே, அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் அதிலும் குறிப்பாக விரைவு போக்குவரத்து தொலைதூர பேருந்துகளில் அதிக அளவில் இரண்டு நாட்களாக 2000 ரூபாய் நோட்டு வருகிறது. இந்நிலையில், திருநெல்வேலி கோட்ட நிர்வாகம் கிளை மேலாளர் மூலமாக நடத்துனர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
அந்த சுற்றறிக்கையில், 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்துவதில் நிர்வாகத்திற்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது. அதனால் வருகிற 27ஆம் தேதி முதல் 2000 ரூபாய் நோட்டுகளை பயணிகளிடம் வாங்க வேண்டாம். அதற்காக அவர்களிடம் கடுமையாக நடந்து கொள்ளாமல் நிலைமையை எடுத்து கூறி பெறுவதை தவிர்க்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதனை மேற்கோள்காட்டி எஸ்.இ.டி.சி. சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சேலம், கும்பகோணம், விழுப்புரம், மதுரை, கோவை, கோட்ட அதிகாரிகள் ரூ.2000 நோட்டுகளை பெற வேண்டாம் என நடத்துனர்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.