அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 11-ம் வகுப்பில் தொழிற்கல்வி பாடப்பிரிவில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் அக்டோபர் 17-ம் தேதி முதல் 21-ம் தேதி வரையில் 40 மணி நேரம் உள்ளுறை பயிற்சி நடத்தப்பட உள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் மாவட்ட முதன்மைக்கல்வி அலுலவர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில்; அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்காக தொழிற்பிரிவு வேலை வாய்ப்பு திறன்களுக்கான பாடத்திட்டம் மற்றும் அது சார்ந்த பயிற்சிகள் வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி 2021 -22-ம் கல்வியாண்டில் 24 பள்ளிகளில் நேரடி உள்ளுறை பயிற்சி வழங்கும் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், மாணவர்களுக்கு தொழிற்சாலைகளில் 80 மணி நேரப் பயிற்சி அளிக்கப்பட்டு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதனால், குறுகிய காலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களுக்குள் பணியாற்றுவதற்கான வாய்ப்பு மாணவர்களுக்கு உருவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 11-ம் வகுப்பில் தொழிற்கல்வி பாடப்பிரிவில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் அக்டோபர் 17-ம் தேதி முதல் 21-ம் தேதி வரையில் 40 மணி நேரம் உள்ளுறை பயிற்சி நடத்தப்பட உள்ளது. இதில் கலந்துக் கொள்ளும் மாணவர்களுக்கு பயணப்படி வழங்கப்படும். பயிற்சியை முடிக்கும் மாணவர்களுக்கு தொழிற்சாலைகள், பள்ளிக் கல்வித்துறையால் சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.