நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் படமாக வெளியானது அமரன். ரங்கூன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ராஜ்குமார் பெரியசாமியின் 2-வது படம் இதுவாகும். இப்படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் சார்பில் கமல்ஹாசன் மற்றும் மகேந்திரன் இணைந்து தயாரித்துள்ளனர்.
மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையப்படுத்தியே கதையை எழுதியிருந்தார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி. ராஷ்ட்ரிய ரைபெல்ஸ் படை பிரிவில் இருந்த முகுந்த் வரதராஜன், பயங்கரவாதிகளால் பிடிபட்டிருந்தபோது, பொதுமக்களை மீட்கும் போது ஏற்பட்ட சண்டையில் வீரமரணம் அடைந்தார். அவரது வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க எண்ணிய இயக்குனர், அதற்கான திரைக்கதையை எழுதி, அதற்கு ஒரு வடிவம் கொடுத்து இன்று வெற்றி பெற்றிருக்கிறார்.
தீபாவளிக்கு வெளியான இந்த திரைப்படம், தற்போது வரை வார இறுதி நாட்களில் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ், இசைக்கு உறுதுணையாக இருக்க, அமரன் திரைப்படம் இதுவரை 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டியுள்ளது. தமிழ்நாட்டைத் தாண்டி ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் இப்படம் அதிக வசூலை குவித்துள்ளது.
இந்நிலையில், அடுத்த மாதம் அமரன் திரைப்படத்தின் வெற்றி விழாவை, கமல்ஹாசன் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அமரன் பட குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி ஆகியோர் இணைந்து அமைச்சருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.