இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கான உக்ரைன் தூதர்களை பணிநீக்கம் செய்வதாக அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் முதல் போர் தொடுத்து வருகிறது. நேட்டோ நாடுகளின் கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 4 மாதங்களுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை அளித்து ஆதரவு தெரிவித்து வருகின்றன. இதனால், போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்நிலையில் இந்தியா, ஜெர்மனி, செக் குடியரசு, நார்வே மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளில் உள்ள தூதர்களை பதவி நீக்கம் செய்யப்பட்டதாகவும், அவர்களுக்கு வேறு புதிய பணி வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும், உக்ரைன் அதிபரின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்த திடீர் பதவி நீக்கத்திற்கான காரணம் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. உக்ரைனுக்கு பொருளாதார மற்றும் ராணுவ ரீதியிலான உதவிகளை ஜெர்மனி வழங்கி வரும் நிலையில், அந்நாட்டிற்கான உக்ரைன் தூதரை ஜெலன்ஸ்கி நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.