திருச்சியில் நடைபாதையில் படுத்திருந்த யாசகர்கள் மீது கார் மோதிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இச்சம்பவத்தில் உடல் நசுங்கி மூன்று பேர் பலியாகியுள்ளனர். ஸ்ரீரங்கம் பகுதியில் அமைந்துள்ள அம்மா மண்டபம் அருகே நடைமேடையில் யாசகர்கள் நேற்றிரவு படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற கார் ஒன்று அதன் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடையில் படுத்திருந்த யாசகர்களின் மீது ஏறி இறங்கியது. இந்தக் கொடூர விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த இரண்டு பேர் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவியில் அனுமதிக்கப்பட்டிருந்த இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்தக் கொடூர விபத்து தொடர்பாக திருச்சி பாலக்கரையைச் சார்ந்த பாலகிருஷ்ணன் மற்றும் அஸ்வந்த் ஆகிய இருவர் திருச்சி போலீசார் ஆல் கைது செய்யப்பட்டுள்ளனர் . யாசகர்களின் மீது கார் மோதிய சம்பவம் ஸ்ரீரங்கம் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது . மக்களிடமும் வாகன ஓட்டிகள் இடமும் சாலை விதிகளை பின்பற்றுவது தொடர்பாக என்னதான் விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் விபத்துக்கள் ஏற்படுவதை குறைக்க முடிவதில்லை. காவல்துறையினரும் மக்களை மிதமான வேகத்துடன் வாகனங்களை செலுத்த தான் சொல்கின்றனர். ஆனால் பொதுமக்களும் ஓட்டுனர்களும் அவற்றை செவி கொடுத்து கேட்காமல் அதிவேகமாகச் சென்று விபத்துகளை ஏற்படுத்துவது வாடிக்கையாகி வருகிறது.