‘சரவணன் மீனாட்சி’, ‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’ போன்ற பல திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்துள்ள பிரபல தமிழ் தொலைக்காட்சி நடிகை லக்ஷ்மி வாசுதேவன், ரசிகர்களிடம் அன்பான வேண்டுகோளுடன் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வீடியோவில் அவரது பெற்றோர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் உட்பட வாட்ஸ்அப்பில் உள்ள அனைத்து தொடர்புகளுக்கும் தனது மார்பிங் செய்யப்பட்ட ஆபாச புகைப்படங்கள் பரப்பப்பட்டதாக கூறியுள்ளார். தனது நெருங்கிய வட்டாரத்திற்கு தன்னைப் பற்றி தெரியும் என்றும், அவர்களுக்கு எதையும் விளக்க வேண்டியதில்லை என்றும் கூறி, இந்த சைபர் கிரைம் முறைக்கு எதிராக ரசிகர்களை எச்சரிப்பதற்காக இந்த விவகாரத்தை அம்பலப்படுத்த அவர் தேர்வு செய்துள்ளார்.
லக்ஷ்மியின் கூற்றுப்படி, அவர் ஐந்து லட்சம் ரூபாய் பரிசை வென்றதாக ஒரு செய்தியைப் தனது அலைபேசி மூலம் பெற்றார், மேலும் அதைக் கிளிக் செய்தவுடன் ஒரு செயலி தானாகவே பதிவிறக்கம் செய்யப்பட்டது. அதன்பிறகு அவரது மொபைலை ஹேக் செய்து புகைப்படங்களை திருடி ஆபாசமாக மார்பிங் செய்து பரப்பியுள்ளனர். சைபர் கிரிமினல், அவர் ஐயாயிரம் ரூபாய் கடன் வாங்கியிருப்பதாக செய்தி அனுப்பினார் அதைத் திருப்பிச் செலுத்துமாறு கோரினார். அப்போது அந்த நபர் அந்த தொகையை செலுத்தாவிட்டால் அவரது புகைப்படங்கள் வெளியாகும் என எச்சரித்துள்ளார்.
தெரியாத நபர்களிடமிருந்து இதுபோன்ற மோசடி இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என்று லட்சுமி தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஹைதராபாத் சைபர் கிரைம் பிரிவில் அவர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.