பிரேசில் நாட்டில் கல்லறைக்குள் புதைக்கப்பட்ட பெண் உயிரோடு மீட்கப்பட்ட சம்பவம் அப்போதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. பிரேசில் நாட்டில் உள்ள மைனஸ் ஜெராய்ஸ் என்ற இடத்தில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. அப்பகுதியில் உள்ள கல்லறை தோட்டத்தில் குழி தோண்டும் நபர்கள் அம்மாகாண காவல்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு புதிதாக வெட்டப்பட்ட கல்லறை ஒன்றில் ரத்தக்கரை காணப்படுவதாகவும் கல்லறைக்குள் இருந்து ஒரு பெண்ணின் அழுகுரல் கேட்பதாகவும் தெரிவித்தனர். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது குறித்த கல்லறையை திறந்து பார்த்ததில் சவப்பெட்டிக்குள் உயிருடன் அடைக்கப்பட்டிருந்த 36 வயது பெண் காவல்துறையால் உயிருடன் மீட்கப்பட்டார்.
அவருக்கு மூச்சு விடுவதில் சிரமமிருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக அந்த பெண்ணிடம் நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில் முகமூடி அணிந்த இருவர் தன்னை கல்லறைக்கு அழைத்து வந்து கடுமையாகத் தாக்கி புதைத்து விட்டு சென்றதாக தெரிவித்திருக்கிறார். ஆனால் இது தொடர்பில் கருத்து தெரிவித்திருக்கும் ராணுவ போலீஸ் அந்தப் பெண் போதை மருந்துகளை அவர்களிடமிருந்து ஏமாற்றியதால் தான் அவரைத் தாக்கி கல்லறையில் வைத்து புதைத்து சென்றதாக தெரிவித்துள்ளனர். மேலும் தற்போது காவல்துறையின் விசாரணையில் துப்பாக்கி தொடர்பான பிரச்சனையில் அந்த பெண் புதைக்கப்பட்டதாக தகவல் வழியாக இருக்கிறது. இதன் காரணமாக காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.