கோவை மாவட்டம் அன்னூரை அடுத்த கரைப்பாளையம் புதூரை சேர்ந்த தங்கமணி என்பவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டிருந்தார். நேற்று மாலை தங்கமணியின் கணவர் சுப்பிரமணி வீடு திரும்பிய போது, மனைவி தங்கமணி சடலமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசில் புகார் அளித்தார். இதுதொடர்பாக அன்னூர் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். தங்கமணி வட்டிக்கு விடும் தொழில் செய்து வந்த நிலையில் இந்த கொலை, பண விவகாரம் தொடர்பாக நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
தங்கமணியை கொலை செய்த நபர்கள் தடயத்தை மறைக்க அவரது உடலை சுற்றியும் மிளகாய் பொடி தூவி விட்டு சென்றுள்ளனர். இது தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், தங்கமணியின் உறவினரான கன்னியப்பன் என்பவரையும் அவரது நண்பர் சுதாகர் என்பவரையும் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், இருவரும் சேர்ந்து தான் தங்கமணியை கொலை செய்திருப்பது தெரிய வந்தது. மேலும், விசாரணையில் தங்கமணியிடம் கன்னியப்பன் கடந்த 2020ஆம் ஆண்டு ரூ.5 லட்சம் கடன் பெற்றுள்ளதும், கடனை திருப்ப செலுத்த முடியாமல், வட்டியும் கொடுக்க முடியாமல் இருந்த நிலையில் தங்கமணி பணத்தை தொடர்ந்து கேட்டு வந்துள்ளார். இதனையடுத்து தங்கமணியை கொலை செய்ய திட்டமிட்ட கன்னியப்பன், வீட்டில் யாரும் இல்லாத நிலையில் வீட்டிலிருந்த உளியால் தங்கமணியின் கழுத்தை தனது நண்பர் சுதாகருடன் சேர்ந்து அறுத்துக் கொலை செய்துள்ளார். இதையடுத்து, இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அவர்களை சிறையில் அடைத்தனர்.