சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையுமே முடக்கிப்போட்டது. இந்நிலையில் தான் சீனாவில் தற்போது புதிய 8 வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சீனாவில் கடந்த 2019இல் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. பிறகு அடுத்தடுத்து பிற நாடுகளுக்கு பரவியது. இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் உள்பட பல நாடுகளில் கொரோனா வைரஸ் என்பது தீவிரமாக பரவியது. இதனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இறுதியாக முறையான பாதுகாப்பு நடவடிக்கைள் மற்றும் கொரோனா தடுப்பூசி ஆகியவற்றால் வைரஸ் பரவல் குறைந்தது.
இதற்கிடையே தான் தற்போது திடுக்கிட வைக்கும் மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, சீனாவில் புதிதாக 8 வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதோடு இந்த வைரஸ்கள் மனிதர்களை தாக்கும் தன்மையுடன் இருப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, சீனாவின் தெற்கு கடற்கரையில் உள்ள ஹைனான் தீவில் தான் புதிதாக 8 வைரஸ்களை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
எதிர்காலங்களில் கொரோனா போன்ற வைரஸ் தாக்குதல் ஏற்பட்டால் அதிலிருந்து மனிதர்களை பாதுகாப்பது எப்படி? என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றன. இதற்கு சீன அரசு உதவி செய்து வருகிறது. இந்த ஆய்வின்போது வவ்வால்கள் உள்பட கொறித்துண்ணும் உயிரினங்களிடம் இருந்து 700 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த ஆய்வில் தான் புதிதாக 8 வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
8 வைரஸ்களில் ஒரு வைரஸ் என்பது SARS-CoV-2 எனும் கொரோனா வைரசுக்கான குடும்பத்தை சேர்ந்ததாகும். இந்த வைரஸ்கள் பரவ தொடங்கினால், மனிதர்களையும் தாக்கும் தன்மையை கொண்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான விவரம் வைரலாஜிகா சினிமா எனும் இதழில் விரிவாக வெளியிடப்பட்டுள்ளது. சீனாவின் இந்த தகவல் என்பது தற்போது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.