தியாகி இமானுவேல் சேகரன் நினைவுநாள் மற்றும் தேவர் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்.9ஆம் தேதி முதல் செப்.15ஆம் தேதி வரையிலும் அக்டோபர் 25ஆம் தேதி முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரையிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செப்டம்பர் 11ஆம் தேதியன்று தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாள் நிகழ்ச்சியும், அக்டோபர் 28 – 30ஆம் தேதி வரை பசும்பொன் கிராமத்தில் தேவர் குருபூஜை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இந்த இரு நிகழ்ச்சிகளிலும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள்.
இதனை முன்னிட்டு பொதுமக்களுக்கு இடையூறு தரும் வகையில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க செப். 9ஆம் தேதி முதல் செப்.15ஆம் தேதி வரையிலும், அக்டோபர் 25ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரையிலும் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் அறிவித்துள்ளார்.
இந்த நாட்களில் வாடகை வாகனங்கள் உரிய அனுமதியின்றி மாவட்டத்திற்குள் நுழைய அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் ஒரு கிலோ மீட்டருக்கு முன்பு இருந்து ஊர்வலமாக வரவும், ஜோதி எடுத்தல் போன்ற நிகழ்வுகளும் அனுமதிக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.