அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கூட்டு மதிப்பு நடைமுறை செயல்படுத்தப்பட்டதால், அவற்றை வாங்குவோர் பாதிக்கப்படுகிறார்கள் என வெளியாகும் செய்தியில் உண்மை இல்லை என்றும் அடுக்குமாடி குடியிருப்பு வாங்குவோருக்கு கூட்டு மதிப்பு நடைமுறையால் சலுகைகளே கிடைத்துள்ளன என்று தமிழக அரசின் வணிக வரித்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பதிவுத்துறையில் அடுக்குமாடி குடியிருப்புகள் கிரைய ஆவண பதிவுகள் தொடர்பாக கடந்தாண்டு டிசம்பர் 1ஆம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்பட்ட கூட்டு மதிப்பு நிர்ணயம் செய்யும் நடைமுறை குறித்து வேண்டுமென்றே சில தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனை செய்யப்படும்போது பிரிபடாத பாக அடிமனை மதிப்பு மற்றும் கட்டிடத்தின் மதிப்பு ஆகியவற்றைச் சேர்த்து சதுரடி அடிப்படையிலேயே அடுக்குமாடி குடியிருப்புகளின் மதிப்பு கட்டுமான நிறுவனங்களால் விளம்பரப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
ஆனால், கடந்த 1.12.2023 தேதிக்கு முன்புவரை அடுக்குமாடி குடியிருப்புகளைப் பொருத்து பிரிபடாத அடிமனை பாகம் மட்டும் தனி கிரைய ஆவணமாகவும், கட்டிடத்தைப் பொருத்து கட்டுமான உடன்படிக்கை தனி ஆவணமாகவும் என இரண்டு ஆவணங்களாக பதிவு செய்யப்பட்டு வந்தது. இதன் காரணமாக கட்டிடத்தை பொறுத்து அதனை வாங்குபவர்களுக்கு முழுமையாக சட்டபூர்வ உரிமை கிடைக்க பெறுவதில்லை. அடுக்குமாடி குடியிருப்புகளைப் பொருத்து இவ்வாறு இரு ஆவணங்களாகப் பதிவு செய்யும் நடைமுறை தமிழ்நாட்டைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் நடைமுறையில் இல்லை.
எனவே தான் பல்வேறு கருத்து கேட்பு கூட்டங்களுக்குப் பின்னர் அடுக்குமாடி குடியிருப்புகளின் விற்பனையை இரு ஆவணங்களாகப் பதிவு செய்யும் நடைமுறை கைவிடப்பட்டு, பிரிபடாத பாக அடிமனை மற்றும் கட்டிடத்திற்கான கூட்டு மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டு, அந்த கூட்டு மதிப்பின் அடிப்படையில் பிரிபடாத பாக அடிமனை மற்றும் கட்டிடம் இரண்டையும் ஒரே கிரைய ஆவணமாகவே பதிவு செய்ய வேண்டும் என்ற நடைமுறை கொண்டுவரப்பட்டது. கூட்டு மதிப்பின் அடிப்படையில் ஒரே கிரைய ஆவணமாக பதிவு செய்யும் நடைமுறை 1.12.2023 முதல் அறிமுகப்படுத்தப்பட்டபோது, புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு வாங்குவோருக்கு சலுகையும் வழங்கப்பட்டுள்ளது. எனவே, அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கூட்டு மதிப்பு நடைமுறை செயல்படுத்தப்பட்டதால், அவற்றை வாங்குவோர் பாதிக்கப்படுகிறார்கள் என பரப்பப்படும் செய்தியில் உண்மை இல்லை” என்று தெரிவித்துள்ளார்.