தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை கண்டறிவதற்காக பல்வேறு துறை சார்ந்த அமைச்சர்களின் கீழ் தாசில்தார்களின் தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் ஏரல் தாலுகாவிற்கு உட்பட்ட கேம்லாபாத், பால்குளம், திருக்கோளூர், உடையார்குளம், உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கனமழையால் தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக முதற்கட்டமாக 6000 ரூபாய் ரொக்கம் மற்றும் 5 கிலோ அரிசி வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. மழை வெள்ளத்தால் வெகுவாக பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கு அடுத்த கட்ட நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகிறது. பயிர் கடன்கள் குறித்தும் உரிய முடிவினை முதல்வர் அறிவிப்பார்” என்றார்.