ஆசிய கபடி சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் ஈரானை வீழ்த்தி இந்தியா தங்கம் வென்றது.
இந்தியா, ஜப்பான், ஈரான், சைனீஸ் தைபே, தென்கொரியா, ஹாங்காங் ஆகிய நாடுகள் பங்கேற்கும் ஆசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 27ஆம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 10 முறை நடந்து முடிந்துள்ள இந்த தொடரில் 7 முறை தங்க பதக்கம் வென்ற அணியாக இந்தியா கம்பீரமாக இந்த தொடரிலும் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. முதல் நாளிலேயே இரண்டு வெற்றிகளை இந்தியா பெற்றிருந்தது. முதல் போட்டியில் 76-13 என்ற கணக்கில் கொரியாவையும், 53-19 என்ற கணக்கில் சைனீஸ் தைபே அணியையும் வென்றது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் ஜப்பான் அணியை எதிர்கொண்டு 62-17 என்ற கணக்கில் வெற்றி வாகை சூடியது. இதனை தொடர்ந்து நேற்றைய ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் இந்தியாவிற்கு அடுத்த இடத்தில் 3 தொடர் வெற்றிகளை பெற்ற ஈரான் அணியுடன் மோதியது.
இதில், பரபரப்பாக சென்ற ஆட்டத்தில் 33–28 என்ற புள்ளி கணக்கில் ஈரானை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது .இந்நிலையில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில், பவன் செராவத் தலைமையிலான இந்தியா ஈரானுடன் மோதியது. இதில் இந்திய அணி வீரர்கள் தங்களது திறமையான ஆட்டத்தால் 42-32 என்ற புள்ளி கணக்கில் ஈரானை வீழ்த்தினர். இதனால், 11வது சீசன் ஆசிய கபடி சாம்பியன்ஷிப் லீக் போட்டியில் கோப்பையை இந்திய அணி கைப்பற்றி, 8வது முறை சாம்பியன் பட்டம் வென்றது. இந்த போட்டியின் போது இந்தியா இரண்டு நாட்கள் நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் ஈரானை தோற்கடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.