மாநில கல்விக் கொள்கை தொடர்பாக ஆசிரியர்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், தனியார் கல்வி நிறுவனங்கள், பொதுமக்களிடம் கருத்து கேட்க கல்விக் கொள்கை குழு முடிவு செய்துள்ளது.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால், அதற்கு பதிலாக மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தொடர்ந்து மாநிலத்துக்கான தனித்துவமான கல்விக் கொள்கையை வகுப்பதற்காக கல்வியாளர்கள், வல்லுநர்கள் கொண்ட உயர்நிலைக் குழு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க, டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
மாநில கல்விக் கொள்கையை வடிவமைக்க ஓய்வுபெற்ற நீதியரசர் முருகேசன் தலைமையில் 13 பேர் கொண்ட குழு, ஓராண்டு காலத்தில் கல்விக் கொள்கையை வடிவமைத்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. இதற்கிடையே, அண்மையில் மாநில கல்விக் கொள்கையை வடிவமைக்க அமைக்கப்பட்டுள்ள குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார். குழுத் தலைவர் முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன், குழு உறுப்பினர்கள், அரசு மூத்த அதிகாரிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டர். அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சில அறிவுறுத்தல்களை அக்குழுவினருக்கு வழங்கியதாக கூறப்பட்டது.
இந்நிலையில், மாநில கல்விக் கொள்கை தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை 8 மண்டலங்களாக பிரித்து, மாநிலம் முழுவதும் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்த கல்விக் கொள்கை குழு திட்டமிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஆசிரியர்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், தனியார் கல்வி நிறுவனங்கள், பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட உள்ளது. அதேபோல் தங்களது கருத்துகளை மின்னஞ்சல் மற்றும் தபால் மூலம் பொதுமக்கள் அனுப்பலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதற்காக மின்னஞ்சல் மற்றும் தபால் முகவரி விரைவில் வெளியிடப்படும் என மாநில கல்விக் கொள்கை குழு தெரிவித்துள்ளது.