பள்ளி மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்து வந்த டியூசன் ஆசிரியரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்நாதன் (40). இவர், தோல் தொழிற்சாலையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். மாலையில் தனியார் டியூசன் சென்டரில் வேதியியல் பாட ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், செந்தில்நாதனுக்கு டியூசன் சென்டருக்கு படிக்க வந்த 17 வயது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் செந்தில்நாதன் தனது பிறந்தநாள் அன்று மாணவியை வீட்டிற்கு அழைத்துச் சென்று ஆசைவார்த்தை கூறி வலுக்கட்டாயமாக உடலுறவு வைத்துள்ளார். இதை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார். இப்படியே, பலமுறை அந்த மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதனிடையே, மாணவியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து பெற்றோர், இதுகுறித்து விசாரித்துள்ளனர். அப்போது தனக்கு நேர்ந்த கொடுமையை மாணவி கதறிய படி கூறியுள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள டியூசன் ஆசிரியர் செந்தில்நாதனை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.