கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் பரவியபோது பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அந்த இக்காட்டான சூழ்நிலையில் இருந்து உலகம் மீண்டு வந்த நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததால் மீண்டும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. அந்த வகையில், இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றன. அதுவும் பாகிஸ்தான் நாட்டில் தற்போது அடிப்படை உணவுக்கே பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் கோதுமைக்காக பொதுமக்கள் மோதிக்கொள்ளும் காட்சிகளும் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. கடுமையான தட்டுப்பாடுகளால் அங்கு விலைவாசி 23% அதிகரித்துள்ளது.

அதன்படி, கோதுமை மாவின் 20 கிலோ பாக்கெட் ரூ.3,100-க்கும், ஒரு கிலோ சர்க்கரை ரூ.155-க்கும், ஒரு கிலோ கோழிக்கறி ரூ.700-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், அரசால் மானிய விலைக்கு வழங்கப்படும் கோதுமை, சர்க்கரை, நெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையும் 62 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்து வருவது, அந்நாட்டை திவால் நிலைக்கு கொண்டுச் செல்லும் என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்நிலையில், அணு ஆயுத வல்லமை படைத்த நாடு, பொருளாதாரத்திற்கு மற்ற நாடுகளை கெஞ்சுவது வெட்க கேடானது என பிரதமர் ஷபாஸ் ஷெரிப் கவலை தெரிவித்துள்ளார்.