மருத்துவர்கள் எழுதிக் கொடுக்கும் மருந்து சீட்டில் மருத்துவர்களின் கையெழுத்து புரியவில்லையா? என்ன மாத்திரை, மருந்து என்று தெரியவில்லையா? இனி கவலை வேண்டாம். இதற்கான வசதியை கூகுள் அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.
உடல்நிலை சரியில்லை என்று நாம் மருத்துவர்களை அணுகினால் நமது உடல் நிலையை பரிசோதிக்கும் மருத்துவர் மருந்து சீட்டுகளை எழுதி தருவார். இது போன்ற மருந்து சீட்டுகளில் மருத்துவர்களின் கையெழுத்துகள் பெரும்பாலும் புரியவதில்லை. மருத்துவத்துறையில் இருப்பவர்களுக்கு மட்டுமே அவர்களின் கையெழுத்து புரியும். ஆனால், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் விதிப்படி, மருத்துவர்கள் எழுதிக் கொடுக்கும் ஒவ்வொரு மருந்தின் பெயரும், கையெழுத்தும் சாமானிய மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் தெளிவாக இருக்க வேண்டும் என்றும் நாம் என்ன மருந்து வாங்க போகிறோம் என்பதை மக்கள் மருந்தகம் செல்வதற்கு முன்பே தெரிந்து கொள்ளும் வகையில் இருக்க வேண்டும் எனவும் விதி உள்ளது. ஆனால், பெரும்பாலான மருத்துவர்கள் இந்த விதியினை மதிப்பதில்லை.

நோயாளிகள் மருந்தகம் சென்று அவர்கள் மருந்துகளை கொடுத்த பிறகு தனக்கு என்ன மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளது என தெரிந்துகொள்ளும் நிலை உள்ளது. இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வு கட்டும் விதமாக கூகுள் மாஸ் ஐடியாவை அறிமுகப்படுத்த உள்ளது. அதாவது, அண்மையில் நடைபெற்ற கூகுள் ஃபார் இந்தியா நிகழ்ச்சியில், செயற்கை நுண்ணறிவு முறைகளை பயன்படுத்தி இந்த புதிய அப்டேட்டை கொண்டு வரபோவதாக தெரிவித்துள்ளது. அதாவது மருத்துவர்கள் எழுதிக் கொடுக்கும் மருந்து சீட்டை ஸ்கேன் செய்தால் மருந்துகளின் பெயர் தெளிவாக தெரியும். ஆனால், இந்த பயன்பாடு எப்பொழுது பயன்பாட்டுக்கு வரும் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. இருப்பினும் கூகுளின் இந்த புதிய அப்டேட் டெவலப் ஸ்டேஜ் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.