உலகளவில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் போன்ற மொபைல் ஆபரேட்டிங் சிஸ்டம்கள் பாதுகாப்பானவை என்று கருதப்படுகிறது.. ஸ்மார்ட்போனை சரியாக இயக்கவும், அதை சரியான கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக வைக்கவும் இந்த ஆபரேட்டிங் சிஸ்டம் மிகவும் முக்கியமானது.. இந்த நிலையில் இந்தியா முதன்முதலாக ஒரு பாதுகாப்பான ஆபரேட்டிங் சிஸ்டத்தை உருவாக்கி உள்ளது.. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட OS-ஐ சென்னை ஐஐடி, ஜாண்ட்கே ஆபரேஷன்ஸ் லிமிடெட் உதவியுடன் உருவாக்கி உள்ளது.. இதற்கு BharOS என்று பெயரிடப்பட்டுள்ளது… பிரதமர் மோடியின் தன்னிறைவு இந்தியா திட்டத்தின் ஒரு குறிப்பிடத்தக்க பங்களிப்பாக இது கருதப்படுகிறது.. இந்த BharOS பயனர்களுக்கு பாதுகாப்பான சூழலை வழங்குவதாக கூறப்படுகிறது.
இந்த BharOS மொபைல் இயங்குதளம் பயனர்களுக்கு சுதந்திரம், கட்டுப்பாடு மற்றும் நெகிழ்வுத்தன்மையை வழங்குவதாக கூறப்படுகிறது.. இதன் மூலம் தேவைகளுக்கு ஏற்ப செயலிகளை தேர்வு செய்து பயன்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.. இது இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட பாதுகாப்பான OS ஆகும்..
ஆண்ட்ராய்டு போல் இல்லாமல், இதில் டிஃபால்ட் ஆப்ஸ் கிடையாது என்பதால், பயனர்களுக்கு அதிக ஸ்டோரேஜ் வசதி கிடைக்கும்.. மேலும் பயனர்கள் தங்களுக்கு விருப்பமான செயலியை மட்டும் தேர்ந்தெடுத்து பயன்படுத்த முடியும்.. தெரியாத செயலிகளை பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் இதில் இல்லை.. ஆண்ட்ராய்டு போன்களை போலவே, நேட்டிவ் ஓவர் தி ஏர் ( NOTA) அப்டேட்களும் இதற்கு வழங்கப்படும்.. எனவே பயனர்கள் இந்த OSஐ தனியாக அப்டேட் செய்ய தேவையில்லை.. ஆட்டோமெட்டிகாகவே OS அதை அப்டேட் செய்து கொள்ளும்..
பயனர்கள் தங்களுக்கு வேண்டிய செயலிகளை பிரைவேட் ஆப் ஸ்டோர் சர்வீசஸ் (PASS) மூலம் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.. மேலும் பயனர்கள், தாங்கள் நிறுவும் செயலிகள் பாதுகாப்பானவை என்றும், ஏதேனும் சாத்தியமான பாதுகாப்பு பாதிப்புகள் அல்லது தனியுரிமை மீறல் உள்ளதா என சரிபார்க்க முடியும்..
எனினும் கடுமையான தனியுரிமை மற்றும் பாதுகாப்பு தேவைகளை கொண்ட நிறுவனங்களுக்கு மட்டுமே தற்போது BharOS வழங்கப்படுகிறது.. தற்போது சோதனை நிலையில் உள்ள இந்த OS-ன் பிரச்சனைகளையும், சவால்களை சரி செய்து வருவதாக டெவலெப்பர்கள் தெரிவித்துள்ளனர்.. விரைவில் மக்கள் எளிதாக பயன்படுத்தும் வகையில், மற்ற OS போன்றே பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று கூறப்படுகிறது..
சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி. காமகோடி இதுகுறித்து பேசிய போது , “BharOS சேவை என்பது நம்பிக்கையின் அடித்தளத்தில் கட்டமைக்கப்பட்ட மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம்.. இது பயனர்களுக்கு அதிக சுதந்திரம், கட்டுப்பாடு மற்றும் தேவையான செயலிகளைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்துவதற்கான நெகிழ்வுத்தன்மையை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது. இந்த புதுமையான அமைப்பு பயனர்கள் தங்கள் மொபைல் சாதனங்களில் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை ஆகியவற்றில் புரட்சியை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.. ” என்று தெரிவித்தார்..