விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி, இதுவரை 6 சீசன்களை நிறைவு செய்துள்ள நிலையில், தற்போது 7-வது சீசன் தொடங்க இருக்கிறது. அதற்கான பணிகளும் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த முறையும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இதற்காக அவருக்கு ரூ.130 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, பிக்பாஸ் 7 சீசனுக்கான ஆடிஷன் நடந்து வருவதாகவும் அதில், விஜய் டிவி சரத் மற்றும் மாகாபா ஆனந்த் ஆகியோரும், தொகுப்பாளினி பாவனா மற்றும் நடிகை உமா ரியாஸ் மற்றும் இரவின் நிழல் பட நடிகை ரேகா நாயர் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டதாக தகவல்கள் கசிந்தன.
இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 7இல் கோவையை சேர்ந்த பெண் ஓட்டுநர் ஷர்மிளா பங்கேற்க வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. அண்மை காலமாக, ஷர்மிளா பெரிய அளவில் மக்களின் பாராட்டுகளை பெற்று வந்தார். இந்நிலையில், எம்பி கனிமொழி, ஷர்மிளாவை பாராட்டும் வகையில் கோவை முதல் பீளமேடு வரை செல்லும் ஷர்மிளா ஓட்டும் தனியார் பேருந்தில் பயணம் செய்தார். அப்போது அவருக்கு ஒரு வாட்ச் ஒன்றையும் பரிசளித்தார்.
ஆனால் இந்த நிகழ்வு முடிந்து தனது அலுவலகம் சென்ற ஷர்மிளா, அந்த பஸ் நடத்துனர் மீது தனது முதலாளியிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் அதற்கு அந்த நடத்துனர், ஷர்மிளா தனது வீண் விளம்பரத்திற்காக பிரபலங்களை வண்டியில் ஏற்றி குழப்பம் ஏற்படுத்தியதாக பதில் புகார் தெரிவிக்க, நிர்வாகம் ஷர்மிளாவை வேலையில் இருந்து நீக்கியது. ஷர்மிளாவை வேலையை விட்டு அனுப்பியதை எதிர்த்து பலர் குரல் கொடுத்த நிலையில், கமல்ஹாசன், ஷர்மிளாவை நேரில் அழைத்து பேசி, அவருக்கு ஒரு காரை பரிசாக அளித்துள்ளார். இதற்கிடையே, பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலங்கள் பல வகையில் தேர்வு செய்யப்பட்டு அவர்களை வீட்டிற்குள் அனுப்புவார்கள். ஆகையால், ஷர்மிளா பிக்பாஸ் சீசன் 7இல் பங்கேற்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.