மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரின் உஷா நகர் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவி, தனியார் பள்ளி ஒன்றில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர், கடந்த புதன்கிழமை அன்று பள்ளிக்கு வழக்கம் போல சென்றுள்ளார். அங்கு குடியரசு தின விழா ஒத்திகை நடைபெற்ற நிலையில், அதில் பங்கேற்ற மாணவி விரிந்தா, ஒத்திகை முடிந்து வகுப்புக்கு சென்றுள்ளார். இந்நிலையில், சுமார் 12 மணியளவில் திடீரென மயங்கி விழுந்த மாணவியை, அங்கிருந்த ஆசிரியர்கள் உடனடியாக மீட்டு தூக்கிக் சென்றனர். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர், மாணவி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மாரடைப்பு ஏற்பட்டதே மாணவியின் மரணத்திற்கு காரணம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த செய்தி அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மாணவி விரிந்தாவுக்கு எந்த நோய் பாதிப்பும் இல்லை. சம்பவ தினத்தன்று இந்தூரில் வழக்கத்தை விட குளிர் அதிகமாக இருந்துள்ளது. மாணவி மெலிதான விளையாட்டு பயிற்சிக்கான உடைகளை அணிந்து கொண்டு குடியரசு தின விழா ஒத்திகை செய்துள்ளார். மேலும், அந்த நேரத்தில் அவர் சில நொறுக்கு தீனிகளையும் சாப்பிட்டுள்ளார். மாணவிக்கு மாரடைப்பு ஏற்பட இவை காரணிகளாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தூரைச் சேர்ந்த முஸ்கான் என்ற சமூக தொண்டு நிறுவனம் மாணவியின் பெற்றோரை தொடர்பு கொண்டு கண் தானத்திற்காக கோரிக்கை வைத்தது. அவர்களின் கோரிக்கையை ஏற்று உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினர் அவரது கண்களை தானம் செய்துள்ளனர்.
குளிர் காலத்தில் இருதயம் சார்ந்த பாதிப்புகள் அதிகம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், அனைவரும் எச்சரிக்கையாக இருக்கும் படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். குறிப்பாக, உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சியில் கவனம் செலுத்த வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.