HDFC வங்கியின் சுமார் 6 லட்சம் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் டார்க் வெப்பில் கசிந்ததாக தகவல் வெளியான நிலையில், அந்த வங்கி இதனை மறுத்துள்ளது..
தகவல் திருட்டு என்பது தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் சாதாரணமான நிகழ்வாகி விட்டது.. வங்கி தொடர்பான பணிகள் உள்ளிட்ட பல முக்கியமான பணிகளையும் ஆன்லைனிலேயே செய்து முடிக்க முடியும்.. அந்த வகையில் இணையத்தில் நமது தகவல்களை பதிவிடும் போது, அல்லது நமது ஸ்மார்ட்போனில் பல்வேறு செயலிகள் மூலம் நமக்கே தெரியாமல் நமது தனிப்பட்ட தரவுகள் சர்வரில் சேமிக்கப்படுகின்றன.. ஆனால் அந்த தரவுகள் பாதுகாப்பாக இருக்குமா என்றால் இல்லை என்பதே பதில்…
சமீப காலமாக லட்சக்கணக்கான மக்களின் தனிப்பட்ட தகவல்கள் ஹேக்கர்களுக்கு விற்கப்படுவதாக கூறப்படுகிறது.. அந்த வகையில் HDFC வங்கி வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தரவுகள் டார்க் வெப் (Dark Web) ஹேக்கர் மன்றத்தில் வெளியிடப்பட்டதாக தனியுரிமை விவகார இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
அந்த தரவுகளில் வாடிக்கையாளர்களின் முழு பெயர்கள், மின்னஞ்சல் முகவரிகள், உடல் முகவரிகள் மற்றும் முக்கியமான நிதித் தரவு ஆகியவை அடங்கும் என்று கூறப்படுகிறது.. சைபர்-குற்றவாளிகள் பிரபல ஹேக்கர் மன்றமான டார்க் வெப்பில் இந்த தரவுகளை விற்பனைக்கு வெளியிட்டதாக கூறப்படுகிறது. மே 2022 முதல் மார்ச் 2023 வரையிலான தரவுகள் திருடப்பட்டுள்ளது என்றும் தெரிகிறது.
ஆனால் HDFC வங்கி இந்த தகவலை மறுத்துள்ளது.. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள HDFC வங்கி, ” HDFC வங்கியில் தரவு கசிவு எதுவும் இல்லை.. எங்கள் தொழில்நுட்ப அமைப்பு, எந்த அங்கீகரிக்கப்படாத முறையிலும் அணுகப்படவில்லை.. எங்கள் அமைப்புகளில் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். எவ்வாறாயினும், எங்கள் வாடிக்கையாளர்களின் தரவு பாதுகாப்பு விஷயத்தை நாங்கள் மிகுந்த தீவிரத்துடன் கையாண்டு வருகிறோம்.. ” என்று தெரிவித்துள்ளது.