ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு பாஜக ஆதரவு தெரிவித்துள்ளது..
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் சிவபிரசாத், தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவி வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் முன்னாள் எம்.எல்.ஏ. தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.. இதே போல் ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் செந்தில் முருகன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது.. ஆனால் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட கூடாது என்பதற்காக தங்கள் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகன் வேட்பு மனுவை வாபஸ் பெறுவார் என்று ஓபிஎஸ் தரப்பு அறிவித்தது..
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு பாஜக ஆதரவு தெரிவித்துள்ளது.. ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு முழு ஆதரவை தெரிவித்து கொள்வதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.. பாஜக தலைவர்களும், நிர்வாகிகளும், தொண்டர்களும் தென்னரசு வெற்றிக்காக பாடுபட வேண்டும் என்றும் கூறியுள்ளார்..
மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அதிமுக வேட்பாளரை நிறுத்தி உள்ள பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.. அதே போல கூட்டணியின் நலன் கருதி, தங்கள் வேட்பாளரை வாபஸ் பெற்ற பன்னீர்செல்வத்துக்கு நன்றி என்று அவர் தெரிவித்துள்ளார்.. தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி வேட்பாளராக களம் காணும் தென்னரசுக்கு வாழ்த்துக்கள் என்றும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்..