மருத்துவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் நாகர்கோவில் பகுதிகளில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம் பார்வதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் தற்போது பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகராக இருந்து வருகிறார்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கோட்டாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். மேலும் உடல் நலக்குறைவு காரணமாக அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று வர வேண்டி இருந்திருக்கிறது . இந்நிலையில் அவசர தேவைக்காக மருத்துவரின் செல்போன் நம்பரை வாங்கி இருக்கிறார் ஜெயக்குமார் . ஆரம்ப கட்டத்தில் மருத்துவம் தொடர்பான சந்தேகங்களுக்கு மட்டும் தொலைபேசி செய்த அவர் அதன் பிறகு அடிக்கடி போன் செய்து பெண் மருத்துவரிடம் பாலியல் ரீதியான தொல்லையில் ஈடுபட்டதாக தெரிகிறது.
மேலும் அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று அந்த மருத்துவருக்கு தொந்தரவு கொடுத்து வந்திருக்கிறார் ஜெயக்குமார். இவரது தொல்லைகளை பொறுத்துக் கொள்ள முடியாத பெண் மருத்துவர் இது தொடர்பாக கோட்டார் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்தார். அவரது புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த பிரமுகரான ஜெயக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
காவல்துறை நடத்திய விசாரணையில் இவர் மீது பல குற்றச்சாட்டுகள் இருப்பது தெரிய வந்திருக்கிறது . கடந்த 2022 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற காவல் துறை உதவி ஆய்வாளரிடம் பண மோசடியில் ஈடுபட்டது முதல் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டது வரை பல சம்பவங்கள் வெளியாகி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிறையிலடைத்தனர்.