கடந்த 2011-ம் ஆண்டு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சராக இருந்த போது, அவரின் மகன் கார்த்தி சிதம்பரம் விசா முறைகேட்டில் ஈடுபட்டதாக சிபிஐ குற்றம்சாட்டி உள்ளது.. கார்த்தி சிதம்பரம் ரூ.50 லட்சம் பெற்றுக்கொண்டு 263 சீனர்கள் சட்டவிரோதமாக இந்தியா வருவதற்கு முறைகேடாக விசாக்கள் வழங்கியதாக சிபிஐ தரப்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.. கடந்த மாதம் இதுதொடர்பாக கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.. சென்னை, மும்பையில் தலா 3 இடங்களிலும், கர்நாடகா, ஒடிசாவில் தலா ஒரு இடத்திலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடைபெற்றது..
மேலும் கார்த்தி சிதம்பரம் மீதான புகாரில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ப.சிதம்பரம் வீட்டிலும் ரெய்டு நடத்தப்பட்டது.. இதையடுத்து கார்த்தி சிதம்பரத்தின் நெருங்கிய கூட்டாளியும், ஆடிட்டருமான பாஸ்கராராமன் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.. இதையடுத்து டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான கார்த்தி சிதம்பரத்திடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்..
இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கார்த்தி சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர்.. கடந்த மே மாதம் சோதனை மேற்கொண்ட போது, ஒரு அறை மட்டும் பூட்டி இருந்ததால் அந்த அறையில் சோதனை மேற்கொள்ளவில்லை எனவும், எனவே அந்த ஒரு அறையில் மட்டும் சோதனை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது..