கூட்டணியில் அங்கம் வகிப்போம் என்று கூறினோம்; கூட்டணி ஆட்சி என்று கூறவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் கடந்த 13ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, “பாஜக, அதிமுக தலைவர்கள் ஒன்றாக இணைந்து வரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்துள்ளோம். தேசிய அளவில் பிரதமர் மோடி தலைமையிலும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழ்நாட்டிலும் கூட்டணி அமைக்கப்படும். தமிழ்நாட்டில் இணைந்து தான் ஆட்சியமைக்க போகிறோம். கூட்டணி ஆட்சிதான் நடக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கூட்டணியில் அங்கம் வகிப்போம் என்று தான் கூறினோம்; கூட்டணி ஆட்சி என்று கூறவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். டெல்லிக்கு பிரதமர் மோடி, தமிழ்நாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி தான் என்று அமித்ஷா கூறினார். நாங்கள் யாருடன் கூட்டணி வைத்தால் திமுகவுக்கு ஏன் எரிச்சலாகிறது..? திமுகவுக்கு பயம்” என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், அதிமுக சார்பில் சட்டப்பேரவையில் அமைச்சர்கள் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தோம். ஆனால், அதன் மீது விவாதம் நடத்த சபாநாயகர் அனுமதி தரவில்லை. இதன் காரணமாகவே பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தோம். இதற்கு முந்தைய காலங்களில், அமைச்சரவை மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தபோது அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தற்போது ஏன் மறுக்கிறார்கள் என தெரியவில்லை” என எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்துள்ளார்.