மத்திய அரசால் கூலித்தொழிலாளர்கள் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த தனிநபர்களுக்கான மாதாந்திர ஓய்வூதிய திட்டம்தான் அடல் பென்ஷன் யோஜனா திட்டம். இத்திட்டத்தில் இதுவரை 7 கோடிக்கும் அதிகமான நபர்கள் பயன் பெற்றுள்ளனர். இந்த திட்டமானது வயதானவர்களுக்கு, பொருளாதார பாதுகாப்பை வழங்கக்கூடிய உத்தரவாதமான திட்டமாகும்.
இத்திட்டத்தில் 18 வயது முதல் 40 வயது வரையிலான நபர்கள் முதலீடு செய்யலாம். நீங்கள் 18 வயதாகும்போது குறைந்தபட்சம் மாதம் ரூ.210 முதலீடு செய்யலாம். அதாவது, தினமும் வெறும் 7 ரூபாய் சேமித்து வந்தாலே, 60 வயதாகும்போது ஒவ்வொரு மாதமும் 5,000 ரூபாய் வரை ஓய்வூதியமாக பெற முடியும். இதே தொகையை 3 மாதங்களுக்கு ஒருமுறை செலுத்தினால் 626 ரூபாயும், 6 மாதங்களுக்கு ஒருமுறை செலுத்தினால் 1,239 ரூபாயும் செலுத்த வேண்டும்.
மாதம் ரூ.1,000 ஓய்வூதியம் பெற விரும்பினால் 18 வயதிலிருந்து ஒவ்வொரு மாதமும் ரூ.42 செலுத்த வேண்டும். சந்தாதாரர் திடீரென இறக்க நேர்ந்துவிட்டால் அவரின் வாழ்க்கை துணைக்கு அந்த பென்ஷன் வழங்கப்படும். ஒருவேளை இருவருமே இறந்துவிட்டால், அந்த பென்ஷன் தொகை சந்தாதாரரின் நாமினிக்கு வழங்கப்படும். 60 வயதிற்கு முன்பாகவே சந்தாதாரரால் இந்த திட்டத்தில் இருந்து வெளியேற முடியாது. அதிக தொகையை கட்டி பென்ஷனை அதிகரித்துக் கொள்ளும் வசதியும் இருக்கிறது.
வங்கி சேமிப்பு கணக்கிலிருந்து மாதம், காலாண்டு, அரையாண்டு அடிப்படையில் ஆட்டோ டெபிட் வசதி மூலம் சந்தா செலுத்திக் கொள்ளலாம். வருமான வரி செலுத்தாத இந்திய குடிமகன் அனைவருமே இந்த சமூக பாதுகாப்பு நல திட்டத்தில் சேர்ந்து பயன் பெற இயலும். பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள், தபால் அலுவலகங்களில் அடல் பென்ஷன் திட்டத்தை நீங்கள் ஆரம்பிக்கலாம். ஆன்லைன் மூலமும் நீங்கள் கணக்கை துவங்கலாம். இதற்கு வங்கிக் கணக்கு, ஆதார் போன்றவை ஆவணமாக வழங்க வேண்டும். மொத்தத்தில், அமைப்புசாரா துறையுடன் தொடர்புடையவர் மற்றும் வேறு எந்த ஓய்வூதிய திட்டத்திலும் முதலீடு செய்யாதவர்களுக்கு இந்த அடல் பென்ஷன் யோஜனா திட்டமானது பெஸ்ட் சாய்ஸாக இருக்கும்.
Read More : ’நடிகைகளை ஒரு போதையாகவே பார்க்கின்றனர்’..!! புது குண்டை தூக்கிப் போட்ட சேரன் பட நடிகை..!!