சமீபத்திய பணிநீக்க நடவடிக்கையின் ஒரு பகுதியாக 380 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக ஸ்விகி நிறுவனம் அறிவித்துள்ளது..
கடந்த சில மாதங்களாக பல முன்னணி நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.. அந்த வகையில் தற்போது பிரபல உணவு விநியோக நிறுவனமான ஸ்விகி, 380 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.. பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு பணி நீக்கம் குறித்து அந்நிறுவனம் மின்னஞ்சல் அனுப்பியுள்ளது.
எனினும் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீஹர்ஷா மஜேடி மன்னிப்பு கோரியுள்ளார். இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள மின்னஞ்சலில் “ ஒரு மறுசீரமைப்புப் பயிற்சியின் ஒரு பகுதியாக எங்கள் குழுவின் அளவைக் குறைக்க நாங்கள் மிகவும் கடினமான முடிவைச் செயல்படுத்தி வருகிறோம். இந்தச் செயல்பாட்டில், 380 திறமையான ஸ்விகி ஊழியர்களிடம் நாங்கள் விடைபெறுகிறோம். அனைத்து தரப்பையும் ஆராய்ந்த பிறகு எடுக்கப்பட்ட மிகவும் கடினமான முடிவாகும். இதற்காக நான் வருந்துகிறேன்.. மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்..” என்று தெரிவித்துள்ளார்..

பணிநீக்கத்திற்கு என்ன காரணம்..? இந்த பணி நீக்கத்திற்கான காரணம் குறித்தும் ஸ்விகி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.. உணவு விநியோகத்திற்கான வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளதாகவும்,, இதன் விளைவாக லாபம் மற்றும் வருமானம் குறைந்துள்ளது என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், ஸ்விக்கி தன்னைத் தக்க வைத்துக் கொள்ள போதுமான பண இருப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது.. அதிப்படியான ஆட்களை பணியமர்த்தியௌம், தற்போதைய பணிநீக்க முடிவுக்கு முக்கிய காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
மேலும் தங்கள் லாப இலக்குகளை அடைய, நிறுவனம் தங்கள் ஒட்டுமொத்த மறைமுக செலவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருந்ததாகவும் அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.. எனினும் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு பெரிய சலுகைகளை வழங்குவதாக ஸ்விகி நிறுவனம் உறுதியளித்துள்ளது
பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு 3-6 மாதங்களுக்குள் உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. அவர்களின் பதவிக்காலம் மற்றும் தரத்தின் அடிப்படையில் இழப்பீடுத் தொகை இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது… உறுதிசெய்யப்பட்ட 3 மாத ஊதியம், பூர்த்தி செய்யப்பட்ட ஒவ்வொரு ஆண்டு சேவைக்கும் 15 நாட்கள் கருணைத் தொகையும் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. பணிநீக்கம் செய்யப்பட்ட அனைவருக்கும் குறைந்தபட்சம் 3 மாத சம்பளம் வழங்கப்படும் என்றும் ஸ்விகி நிறுவனம் உறுதியளித்துள்ளது..