2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரை ஹைப்ரிட் மாடலில் நடத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தரப்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
8 அணிகள் பங்கேற்கும் ஐசிசி டிராபி தொடர் 2025ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி முதல் மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தொடரை பாகிஸ்தான் தொகுத்து வழங்குகிறது. ஆனால் பாகிஸ்தானுக்கு இந்திய வீரர்கள் செல்ல மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை என்பதால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தரப்பில் இருந்து ஐசிசி நிர்வாகத்திற்கு சாம்பியன்ஸ் டிராபி தொடரை ஹைபிரிட் மாடலில் நடத்த கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. பிசிசிஐ-ன் கோரிக்கைக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம்(பிசிபி) சார்பாக கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஐசிசி சார்பில் பிசிசிஐ மற்றும் பிசிபி தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரை ஹைபிரிட் மாடலில் நடத்த ஒப்புதல் அளிக்க வேண்டுமென்றால் இந்திய அணியுடன் முத்தரப்பு தொடருக்கு ஏற்பாடு செய்ய வேண்டும், 2031 வரை இந்தியாவில் நடக்கும் ஐசிசி தொடர்களில் பாகிஸ்தான் விளையாடாது, ஐசிசி தரப்பில் அளிக்கப்படும் நிதி பங்களிப்பை பாகிஸ்தானுக்கு அதிகரிக்க வேண்டும், என்று பல்வேறு நிபந்தனைகள் பாகிஸ்தான் தரப்பில் இருந்து வைக்கப்பட்டது. இந்த நிபந்தனைகளை பிசிசிஐ ஏற்க மறுத்தது. இந்த நிலையில் தான் ஐசிசி தலைவராக ஜெய் ஷா பதவியேற்றார்.
இந்நிலையில் 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரை ஹைப்ரிட் மாடலில் நடத்த ஐசிசி தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. பிசிபி மற்றும் பிசிசிஐ இடையேயான ஒப்பந்தத்தைத் தொடர்ந்து சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியா அணி பங்கேற்கும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடக்கவுள்ளது. மற்ற அணிகள் பங்கேற்கும் போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. மேலும் இந்திய அணி விளையாடும் போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறாததற்கு எந்த இழப்பீடும் அளிக்கப்படாது என்றும் அந்த இழப்பீடை சரிசெய்யும் விதமாக 2027ஆம் ஆண்டுக்கு பின் நடக்கும் ஐசிசி மகளிர் தொடரை நடத்தும் வாய்ப்பு பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் என்றும் ஐசிசி உறுதியளித்துள்ளது.
2026ஆம் ஆண்டு நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பையை இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளும் இணைந்து நடத்தவுள்ளன. இந்த தொடரின் லீக்-நிலை போட்டிகளில் பங்கேற்க பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு வராது எனவும், பாகிஸ்தான் பங்குபெறும் போட்டிகள் அனைத்தும் இலங்கையில் நடத்தவேண்டும் என்ற பிசிபி-யின் நிபந்தனையும் ஏற்கப்பட்டுள்ளது. பிசிபி மற்றும் பிசிசிஐ இடையேயான ஒப்பந்தத்தைத் தொடர்ந்து சாம்பியன்ஸ் டிராபி தொடரை ஹைப்ரிட் மாடலில் நடத்த ஐசிசி ஒப்புதல் அளித்துள்ளது.
Read More: யு 19 ஆசிய கோப்பை 2024..!! வரலாறு படைத்த வங்கதேசம்..!! மோசமான தோல்வியடைந்த இந்தியா..!!