மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் உள்நோயாளிகளாகவும், புறநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு நட்சத்திர நண்பர்கள் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் தினமும் மதிய உணவு வழங்கி வந்தனர்.
இதற்கிடையே, அண்மையில் கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை சம்பவத்தின் எதிரொலியாக தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளை வகுக்கப்பட்டது. இந்நிலையில், இன்று வழக்கம் போல நட்சத்திர நண்பர்கள் அமைப்பை சேர்ந்தவர்கள், மருத்துவமனை வளாகத்திற்கு நோயாளி மற்றும் அவருடன் வந்தவர்களுக்கு உணவு வழங்க வந்தனர்.
அப்போது, மருத்துவமனை பாதுகாவலர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி வெளியே அனுப்பியுள்ளார். இதனால் மருத்துவமனையில் உணவை எதிர்பார்த்து காத்திருந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதோடு மருத்துவமனை வளாகத்தில் உள்ள நடிகர் சூரியின் அம்மன் உணவகம் உள்ளது. அதன் ஊழியர்கள் தங்களது வியாபாரம் பாதிப்படைவதாக கூறி அவர்களை வெளியே அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து உணவுக்காக காத்திருந்த பொதுமக்கள் கூறுகையில், ”எங்களை போன்ற வறுமையில் உள்ள குடும்பத்தினர் சிகிச்சை பெற அரசு மருத்துவமனையை நாடி வருகிறோம். ஆனால், இங்கு விற்பனை செய்யப்படும் உணவு வகைகளின் விலை அதிகமாக இருக்கிறது. இது போன்ற சமூக அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் மருத்துவமனைக்கு வருகை தந்து கொடுக்கும் உணவுகளை நம்பி தான் நாங்கள் இருக்கிறோம்.
அதேபோல, இங்குள்ள நடிகர் சூரியின் அம்மன் உணவகம் பாதிக்கப்படும் என்பதால், எங்களுக்கு உணவு வழங்கக் கூடிய தொண்டு நிறுவனங்களை அவர்களை விரட்டியடிக்கின்றனர். எனவே, இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு எங்களுக்கு உணவு வழங்கும் நபர்களுக்கு மருத்துவமனை வளாகத்தில் இடம் ஒதுக்கி தர வேண்டும். ஏழை மக்களுக்காக இது போன்ற உணவுகளை வழங்கும் அமைப்புகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Read More : பாரா ஒலிம்பிக் | ஒரே போட்டியில் தங்கம் உள்பட 2 பதக்கங்களை வென்ற இந்தியா..!! அசத்திய வீராங்கனைகள்..!!