தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு தென் மாவட்டங்கள் உள்பட 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பரவலாக பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்துக்கு திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கோவை, விருதுநகர், சிவகங்கை, மதுரை, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்றும் நாளையும் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆகையால், அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.
Read more ; இரண்டாவது மனைவியுடன் விவாகரத்து? வைரலாகும் இயக்குனர் செல்வராகவன் ட்வீட்..