சீட்டு விளையாடிக் கொண்டிருந்தவர்களிடம் மாமுல் கேட்ட ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் அதிகாலை 3 மணி அளவில் சக்திவேல்(23), கரி முல்லா(19) உள்ளிட்ட ஏழு நபர்கள் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பிரபல ரவுடி சண்முகம் மற்றும் அவரது கூட்டாளிகள் சீட்டு விளையாடிக் கொண்டிருந்த நபர்களிடம் பணம் கேட்டிருக்கின்றனர். அவர்கள் தர மறுத்ததால் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்திருக்கிறது. சக்திவேல் தரப்பு மற்றும் சண்முகம் தரப்பாகிய இருவரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதலில் ரவுடி சண்முகத்தின் கூட்டாளிகள் அவரை தனியாக விட்டு விட்டு தப்பியோடிச் சென்றுள்ளனர். தனியாக மாற்றிய சண்முகத்தை சக்திவேல் மற்றும் அவரது நண்பர்கள் கடுமையாக தாக்கி தலையில் கல்லை தூக்கி போட்டுள்ளனர். இதில் பிரபலமான ரவுடி சண்முகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். இதனைத் தொடர்ந்து அங்கிருந்து சிலர் தப்பியோடி விட்டனர். சக்திவேல் உட்பட நான்கு சிறுவர்கள் கண்ணன் ரவுண்டானா அருகே ரோந்து பணியில் இருந்த காவல்துறையிடம் சரணடைந்தனர். இதனைத் தொடர்ந்து அவர்களை கைது செய்த காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இறந்த சண்முகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த ரவுடி சண்முகத்துக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தான் திருமணமாகி உள்ளது. அவன் மீது ஆர் கே நகர் மற்றும் வண்ணாரப்பேட்டை காவல் நிலையங்களில் 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.