செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்கவிழாவில் அவசியம் பங்கேற்க வேண்டும் என்றும் பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்..
சர்வதேச செஸ் போட்டியான, செஸ் ஒலிம்பியாட் முதன்முறையாக இந்த ஆண்டு சென்னையில் நடைபெற உள்ளது.. 2022-ம் ஆண்டுக்கான ஏலத்தில் வென்றதன் மூலம் சென்னையில் இந்த போட்டி நடைபெற உள்ளது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் ஜூலை மாதம் 27ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.. இந்த சூழலில், நேற்று முன் தினம் முதலமைச்சர் ஸ்டாலின் செஸ் ஒலிம்பியாட் நடைபெறும் இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார்.. கிட்டத்தட்ட 80% பணிகள் நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது..
ஜூலை 28-ம் தேதி, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கும் செஸ் ஒலிம்பியாட் பிரம்மாண்ட தொடக்க விழா நடைபெற உள்ளது.. இந்த விழாவை தொடங்கி வைக்க வருமாறு பிரதமரிடம் நேரில் அழைப்பு விடுக்க முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி செல்ல உள்ளதாக கூறப்பட்டது.. ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக முதலமைச்சர் ஸ்டாலின் தற்போது காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. கொரோனா அறிகுறிகள் இருப்பதால் அவரின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பு தெரிவித்துள்ளது..
இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மு.க. ஸ்டாலினிடம் தொலைபேசி மூலம் பிரதமர் மோடி நலம் விசாரித்துள்ளார். முதலமைச்சரின் உடல்நிலை குறித்தும், அவருக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து மோடி கேட்டறிந்துள்ளார்..
பிரதமர் மோடி தொலைபேசியில் பேசிய போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை தொடங்கி வைக்க பிரதமருக்கு அழைப்பு விடுத்தார்.. உடல்நலக்குறைவால் நேரில் அழைப்பு விடுக்க முடியாததால் தொலைபேசி மூலம் அழைப்பு விடுப்பதாகவும் முதலமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.. மேலும் விழாவுக்கு நேரில் அழைக்க திமுக எம்.பிக்கள் டி.ஆர். பாலு, கனிமொழி மற்றும் தலைமை செயலாளரை அனுப்பி வைக்க உள்ளதாகவும் மோடியிடம் ஸ்டாலின் தகவல் தெரிவித்துள்ளார்.. எனவே செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்கவிழாவில் அவசியம் பங்கேற்க வேண்டும் என்றும் பிரதமருக்கு முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்..