ஆரூர்தாஸ் மறைவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் ஆகியோர் நடித்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு வசனம் எழுதியவர் ஆரூர்தாஸ். சென்னை தி நகரில் குடும்பத்துடன் வசித்து வந்த ஆரூர்தாஸ் வயது மூப்பின் காரணமாக நேற்று மாலை அவரது இல்லத்தில் காலமானார். ஆரூர்தாஸ் உடல் இன்று மதியம் 12 மணி வரை அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும். பின்னர் இறுதி சடங்குகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரது மறைவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார் அதில், திருவாரூர் மண்ணில் பிறந்து ஆயிரம் திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி திரையுலகில் தனி முத்திரை பதித்த முதுபெரும் வசனகர்த்தா ஆரூர்தாஸ் முதுமை காரணமாக மறைவெய்தினார் என்பதை அறிந்து மிகுந்த துயரமுற்றேன். அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு முத்தமிழறிஞர் கலைஞர் பெயரிலான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதினை இந்த ஆண்டு ஜூன் 3-ம் தேதி கலைஞரின் பிறந்தநாளில் ஆரூர்தாஸ் இல்லத்துக்கே சென்று வழங்கி மகிழ்ந்தேன்.
தன் வசனங்களின் மூலம் திரையுலகை ஆண்ட அவர் தற்போது நம்மிடம் இல்லை என்றாலும், அவர் ஆற்றிய கலைப்பணிகள் என்றென்றும் தமிழ் திரையுலகிலும், படங்களை பார்த்து ரசித்த நெஞ்சங்களிலும் நிலைத்து நிற்கும். கதை வசனகர்த்தா ஆரூர்தாசை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், கலை உலகினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.