நாட்டின் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை திறந்து வைக்க உள்ளார். இதில் முக்கிய நிகழ்வாக தமிழகத்தின் முன்னணி சைவ மடாதிபதிகள் பாரம்பரியம்மிக்க செங்கோலை பிரதமர் நரேந்திரமோடிக்கு தரவுள்ளனர். இந்த செங்கோல் புதிய நாடாளுமன்றத்தின் சபாநாயகர் இருக்கை அருகே வைக்கப்பட உள்ளது.
இந்த செங்கோல் நாடு சுதந்திரம் பெற்றபோது திருவாவடுதுறை ஆதினத்தால் அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் வழங்கப்பட்டது. வரலாற்று சிறப்புமிக்க இந்த செங்கோல் மறுபடியும் புதிய நாடாளுமன்றத்தில் நிறுவப்படுவதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. செங்கோல் குறித்து பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இடையே கருத்து மோதல் நிலவி வருகின்றனர்.
மத்திய அரசு அந்த செங்கோல் குறித்து தெரிவிக்கும் வரலாற்றுக்கு உரிய ஆதாரங்கள் இல்லை என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் காங்கிரஸ் கட்சியின் கருத்துக்கு அமித்ஷா கடுமையான கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் தன்னுடைய வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சுதந்திரம் பெற்ற போது ஆங்கிலேயரிடமிருந்து அதிகாரம் இந்திய குடிமக்களுக்கு மாற்றப்பட்டதை குறிக்கும் விதத்தில், செங்கோல் வழங்கப்பட்டது. இதற்கு ஆதாரம் இல்லை என்று காங்கிரஸ் கட்சி தெரிவிப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சி எதற்காக இந்திய பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை மிகவும் வெறுக்கின்றது. இந்திய சுதந்திரத்தின் அடையாளமாக நேருவுக்கு புனித தன்மை கொண்ட செங்கோல் தமிழகத்தில் இருக்கின்ற ஒரு புனித சைவ மடத்தால் வழங்கப்பட்டது. ஆனால் அது ஒரு வாக்கிங் ஸ்டிக்காக அருங்காட்சியகத்திற்கு அனுப்பப்பட்டது என்று கூறியுள்ளார்.
தற்போது மற்றொரு வெட்கக்கேடான அவமானத்தை காங்கிரஸ் கட்சி செய்திருக்கிறது. புனித சைவ மடமான திருவாவடுதுறை ஆதீனம் இந்தியா சுதந்திரம் பெற்றக்காலத்தில் செங்கோலின் முக்கியத்துவம் தொடர்பாக உரையாற்றினார் ஆதீனத்தின் வரலாற்றை பொய் என்று காங்கிரஸ் கட்சி தெரிவிக்கிறது. காங்கிரஸ் கட்சி தன்னுடைய நடத்தை பற்றி சிந்திக்க வேண்டும் என தன்னுடைய பதிவில் அமித்ஷா விமர்சனம் செய்திருக்கிறார்.