ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அருவிகளில் குளிக்கவும் பரிசல்கள் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாகக் காவிரி ஆறு கர்நாடகத்தில் இருந்து தமிழகத்திற்குள் நுழைகிறது. இங்கு, ஐந்தருவி, சினி அருவி, மெயின் அருவி ஆகியவை உள்ளன. தண்ணீர் பாய்ந்தோடும் காலங்களில் பரிசல்களில் சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்து மகிழ்வார்கள். மேலும், முதலைப்பண்ணை, சிறுவர் பூங்கா உள்ளிட்டவற்றைக் காண, சீசன் காலங்களில் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.
இந்நிலையில், ஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி 60,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி 85,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது நீர்வரத்து 1,05,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் காவிரி ஆற்றங்கரையோர பகுதிகளுக்குப் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆற்றில் இறங்கிக் குளிக்கவோ, அருவியில் இறங்கிக் குளிக்கவோ, ஆற்றைக் கடக்கவோ, ஆற்றின் குறுக்கே கால்நடைகளை அழைத்துச் செல்லவோ மற்றும் படகுகளை இயக்கவோ, படகு சவாரி செய்யவோ கூடாது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.