தமிழகத்தில் கொரோனா பாதிப்பு க்ளஸ்டர் பரவலாக இல்லை என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்..
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1000, 2000 என உயர்ந்து வந்த நிலையில் கடந்த வாரம் 6,000-ஐ கடந்தது. ஒமிக்ரான் மாறுபாட்டின், XBB.1.16 வகை கொரோனா காரணமாக தற்போது பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று கூறப்படுகிறது.. இதை தொடர்ந்து கொரோனா பரிசோதனையை அதிகரிக்கவும், கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு மாநிலங்களை வலியுறுத்தி வருகிறது…
தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், அரசு மருத்துவமனைக்கு வருவோர் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.. மேலும் தமிழகத்தில் தினசரி 11,000 கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாகங்களுக்கு சுகாதாரத்துறை இலக்கு நிர்ணயம் செய்துள்ளது..
மேலும் மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில் இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள 11,000 அரசு மருத்துவமனைகளில், கொரோனா சிகிச்சை கட்டமைப்புகள் தயார் நிலையில் இருக்கிறதா என்பது குறித்த ஆய்வு இன்று நடைபெறுகிறது. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற ஆய்வை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் , “தமிழகத்தில் கொரோனா பாதிப்பு க்ளஸ்டர் பரவலாக இல்லை. அதாவது கொத்து கொத்தாக கொரோனா பரவவில்லை.. தனித்தனியாகவே பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. புதிய திரிபு வீரியம் குறைவாகவே உள்ளது. தமிழகத்தில் ஆக்ஸிஜன் தேவைப்படும் அளவுக்கு பாதிப்பு இல்லை. எனவே பொதுமக்கள் யாரும் பயப்பட தேவையில்லை.. கொரோனா பாதிப்பு மேலும் அதிகரித்தால் பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்குவது குறித்து முடிவெடுக்கப்படும்..” என்று தெரிவித்தார்..