அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு பார்ட்டி வைத்து பணிநீக்கம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே பல்வேறு நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை ஆட்குறைப்பு செய்வதாக அறிவித்து பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. மைக்ரோசாப்ட், கூகுள், அமேசான் போன்ற பெரு நிறுவனங்கள் தொடங்கி நடுத்தர மற்றும் சிறு நிறுவனங்கள் வரை பல்வேறு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்துள்ளன. உலகளவில் பொருளாதார மந்தநிலை அச்சம் நிலவுவதால் முதலீடுகள் குறைந்துள்ளன. எனவே, நிறுவனங்கள் தங்களது செலவுகளை குறைக்கவும், நிதி நெருக்கடியை சமாளிக்கவும் ஏராளமான ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன.
பொதுவாக நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யும்போது அவர்களுக்கு இழப்பீட்டு தொகை உள்ளிட்ட சலுகைகளும், வேறு வேலை தேடுவதற்கான உதவியும் வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில், அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு பிரபலமான சைபர் செக்யூரிட்டி நிறுவனமான Bishop Fox இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் சிலரை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டிருந்தது.
அதன்படி, 13 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்தது. பணிநீக்க அறிவிப்புக்கு முன் இந்நிறுவனமானது, ஊழியர்களுக்கு பார்ட்டி வைத்துள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் ஊழியர்களுக்கு மிகவும் காஸ்ட்லியான பிராண்டெட் மதுபானம் அளிக்கப்பட்டது என்பது தான். அதன்பின் பார்ட்டி முடிந்து ஊழியர்களுக்கு பணிநீக்க அறிவிப்பை வெளியிட்டிருந்தது. Bishop Fox நிறுவனத்தில் சுமார் 400 ஊழியர்கள் பணியாற்றும் நிலையில், 13 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.