5ஆம் வகுப்பு படிக்கும் சிறுவனின் கையில் ஆசிரியர் ஒருவர் டிரில் மெஷினால் ஓட்டை போட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரின் பிரேம் நகரில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு பயிலும் மாணவர்களுக்கு தொழில் சார்ந்த பயிற்சி கொடுப்பதற்காக அண்மையில் அஜித் சிங் (32) என்ற ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆரம்பம் முதலாகவே, மாணவர்களை காட்டுமிராண்டித்தனமாக அவர் தாக்கி வந்துள்ளார். சிறிய தவறு என்றாலும், மாணவர்களை மிக மோசமாக தாக்குவதை இவர் வழக்கமாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில், 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அஜித் சிங் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, ராகுல் என்ற மாணவனிடம் 2ஆம் வாய்ப்பாடை கூறுமாறு கேட்டுள்ளார். ஆனால், சிறுவன் ராகுலுக்கு சரியாக வாய்ப்பாடு சொல்ல வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர் அஜித் சிங், தான் கொண்டு வந்திருந்த டிரில் மெஷினை எடுத்து மாணவனின் கையில் ஓட்டை போட்டார். இதில் மாணவனின் கையில் இருந்து ரத்தம் பீய்த்து அடித்திருக்கிறது. சிறுவனும் வலியில் அலறி துடித்துள்ளான். ஆனாலும், விடாத ஆசிரியர், தொடர்ந்து கையில் ஓட்டை போட்டிருக்கிறார். இதையடுத்து, அங்கிருந்த மாணவர்கள் ஓடிச்சென்று டிரில் மெஷின் சொருகப்பட்டிருந்த ப்ளக் பாயிண்ட்டை ஆஃப் செய்தனர்.

மாணவர்களின் இந்த அலறல் சத்தம் கேட்டு அங்கு மற்ற ஆசிரியர்களும், மாணவர்களும் கூடவே பயந்து போன ஆசிரியர் அஜித் சிங், சுவர் ஏறி குதித்து தப்பினார். பின்னர் ரத்த வெள்ளத்தில் மயங்கி இருந்த மாணவன் ராகுலை அங்கிருந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ராகுலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய அஜித் சிங்கை தேடி வருகின்றனர். இதற்கிடையே, இந்த தகவலை கேள்விப்பட்ட மாணவனின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அந்தப் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.