இலங்கையில் பகல் 12 மணி முதல் நாளை காலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ளது..
வரலாறு காணாத மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாததால் அதிபர் கோட்டபய பதவி விலக வலியுறுத்தி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. இதனால் இலங்கையில் போராட்டம் மீண்டும் தீவிரமடைந்த நிலையில், தற்போது அதிபரின் செயலகம், அதிபர் மாளிகை போராட்டக்கார்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
இதனிடையே தனது குடும்ப உறுப்பினர்கள் 5 பேர் மற்றும் 3 ஊழியர்களுடன் கோட்டபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறி, மாலத்தீவில் தஞ்சம் புகுந்துள்ளார்.. ஆனால் மாலத்தீவிலும் போராட்டம் நடைபெறுவதால் அவர், சிங்கப்பூர் செல்ல உள்ளதாக தெரிகிறது.. ஆனால் அதிபர் பதவியில் இருந்து விலகாமல் கோட்டபய மாலத்தீவு தப்பி சென்றதால் இலங்கையில் போராட்டம் தொடர்ந்து வருகிறது.. மேலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் உடனே பதவி விலக் வேண்டும் என்று கோரி போராட்டம் நடைபெற்று வருகிறது..
அதிபர் மாளிகை, பிரதமர் அலுவலகம், பிரதமரின் இல்லம் மற்றும் அரச ஒளிபரப்பு நிலையங்களை போராட்டக்காரர்கள் கையகப்படுத்தியுள்ளனர். இலங்கையின் இடைக்கால அதிபராக பிரதமர் ரணில் விக்ரம சிங்கவை கோட்டபய ராஜபக்ச நியமித்துள்ள நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கையின் இடைக்கால ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ளதாக தெரிகிறது.. இந்தப் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, விக்கிரமசிங்கே இலங்கையில் அவசரகால நிலையைப் பிரகடனம் செய்தார். சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்க தேவையான அனைத்தை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில் இலங்கையில் பகல் 12 மணி முதல் நாளை காலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.. தலைநகர் கொழும்புவில் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில் இலங்கையில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.. மேலும் அதிபர் மாளிகை, பிரதமர் அலுவலகம் ஆகியவற்றில் இருந்து வெளியேற போராட்டக்காரர்கள் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.. மேலும் தங்களின் கட்டுப்பாட்டில் உள்ள இலங்கை அரசின் கட்டடங்களை திரும்ப ஒப்படைக்கவும் போராட்டக்காரர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது..