டெல்லி மாநிலம் அருணா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு எடுத்து ராணி (35), ஸ்வப்னா (36) என்ற இரு பெண்களும் வசித்து வந்துள்ளனர். ராணி குருகிராம் பகுதியில் உள்ள பியூட்டி பார்லரில் வேலை பார்த்து வந்துள்ளார். ஸ்வப்னா பார்டிகளுக்கான அலங்கார வேலைகள் செய்யும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். ஸ்வப்னா திருமணமாகி விவாகரத்து பெற்ற நிலையில், அவருக்கு ஒரு மகள் இருக்கிறார்.
இந்நிலையில், ஸ்வப்னாவும் ராணியும் கடந்த செவ்வாய் கிழமை இரவு தனது நண்பர்களுடன் சேர்ந்து இரவு விருந்துக்கு சென்றுள்ளனர். நேஹா என்ற தனது தோழி வீட்டிற்கு இவர்கள் சென்று இரவு 1 மணி வரை மது அருந்தி பார்ட்டி செய்துள்ளனர். பின்னர், போதையில் இருவரும் வீடு திரும்பிய நிலையில், அதன் பின்னரும் தூங்காமல் மது அருந்திக் கொண்டு இருந்துள்ளனர். அப்போது ஸவப்னாவுக்கும் ராணிக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தின் போது ஸ்வப்னாவின் தந்தை குறித்து ராணி இழிவாக பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஸ்வப்னா, ராணியை சமையல் அறையில் இருந்த கத்தியால் குத்தியுள்ளார்.
இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த ராணி வீட்டிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதிகாலையில் இச்சம்பவம் நிகழ்ந்த நிலையில், காலை 7 மணி அளவில் காவல்துறைக்கு ஸ்வப்னாவே போன் செய்து தகவலை கூறியுள்ளார். போதையில் இருந்த போது தனது தந்தை குறித்து தவறாக பேசிய ஆத்திரத்தில் தனது ரூம் மேட்டை கத்தியால் குத்தினேன் என அவர் வாக்குமூலம் தந்துள்ளார். ராணியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர், கொலைக்கு பயன்படுத்திய கத்தி உள்ளிட்ட தடயங்களை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் ஸ்வப்னாவை போலீசார் கைது செய்தனர்.