தென்மேற்கு பருவமழை வலுவிழந்துவிட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், அதை சமாளிப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், இது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அதில், அதிகாரிகளுக்கு சில அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.
குறிப்பாக, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும் என்றார். பழைய அனுபவங்களின் அடிப்படையில் பேரிடர் மேலாண்மையை சிறப்பாக மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார். அதேபோல, மக்களுக்கு சிரமங்கள் ஏற்படாத வகையில் பணிகளை செய்ய வேண்டும் என்றும் நீர்நிலைகளில் ஆகாய தாமரைகளை விரைந்து அகற்ற வேண்டும் என்று ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.
அந்தவகையில், சென்னையில் கழிவுநீர் குழாய்களில் தூர்வாரும் பணி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், தென்மேற்கு பருவமழை குறைந்துள்ளதால், பல்வேறு மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தாண்டு தென்மேற்கு பருவமழை தமிழ்நாடு மட்டுமின்றி, அண்டை மாநிலங்களிலுமே குறைந்துவிட்டது.
இந்த மழைபொழிவுதான், விவசாயத்துக்கு அடிப்படையானது. ஆனால், இம்முறை மழை குறைவாக பெய்ததால், பாசனம் மட்டுமின்றி குடிநீர் தேவையை சமாளிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போதே பல மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு தலைதூக்க துவங்கிவிட்டது. தென்மேற்கு பருவமழை போல வடகிழக்கு பருவமழையும் ஏமாற்றினால் நிலைமை இன்னும் மோசமாகும். அதனால்தான், குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிப்பது குறித்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிலுவையில் உள்ள, 50-க்கும் மேற்பட்ட கூட்டு குடிநீர் திட்ட பணிகளை விரைவுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. அத்துடன், குடிநீர் பிரச்சனை ஏற்படாதவாறு, சில திட்டங்கள் கையில் எடுக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.