டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டுக்கு நோட்டீஸ் வழங்க திடீரென போலீஸார் வந்ததால் ஆம் ஆத்மி கட்சியினர் பதற்றம் அடைந்தனர்.
ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்களுக்கு ரூ.25 கோடி கொடுத்து தங்கள் பக்கம் இழுக்க முயற்சிப்பதாக ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த வாரம் பாஜகவுக்கு எதிராகக் குற்றம் சாட்டினார். இதேபோல் டெல்லியின் கல்வியின் அமைச்சர் அதிஷியும் பாஜக ‘ஆபரேஷன் லோட்டஸ் 2.0’ என்ற பெயரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்க்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டியிருந்தார்.
அதிஷி கூறுகையில், “கடந்த காலத்திலும் இதே போன்ற சதித் திட்டங்களை பாஜக மேற்கொண்டது. கடந்த 2022இல் ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்களிடையே பிளவை ஏற்படுத்தி பணம் தருவதாக வாக்குறுதி அளித்து பாஜகவில் சேர்க்க முயற்சித்தனர்” என தெரிவித்திருந்தார். ஆம் ஆத்மி கட்சியின் இத்தகைய குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்சதேவா தலைமையிலான பாஜகவினர், கடந்த 30ஆம் தேதி டெல்லி காவல்துறைத் தலைவரை சந்தித்து, கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துமாறு புகார் அளித்தனர். இதேபோல், டெல்லி போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோராவிடமும் பாஜகவினர் புகார் அளித்தனர்.
இதுகுறித்து வீரேந்திர சச்சதேவா கூறுகையில், “கெஜ்ரிவால் கூறிய குற்றச்சாட்டுகளை அவர் நிரூபிக்க வேண்டும். ஆனால், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த யாரும் இதுவரை எங்கள் மீதான குற்றச்சாட்டு தொடர்பான எந்த ஆதாரத்தையும் வெளியிடவில்லை. கெஜ்ரிவாலும், ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களும் சுமத்திய குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்பதையே இது காட்டுகிறது” என்றார்.
இந்நிலையில், பாஜகவினர் அளித்த புகாரின்பேரில், கெஜ்ரிவாலுக்கும், அதிஷிக்கும் நோட்டீஸ் வழங்க டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் நேற்று அவர்களது வீடுகளுக்குச் சென்றனர். ஆனால், இருவரும் நோட்டீஸை வாங்க மறுத்துவிட்டனர். இந்நிலையில், இருவரது வீடுகளுக்கும் இன்று மீண்டும் சென்று நோட்டீஸ் வழங்க உள்ளதாக டெல்லி காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.