தலைநகர் டெல்லியில் சுமார் 970 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிக வசதிகளுடன் கூடிய புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டிருக்கிறது. 18 ஏக்கரில் 64.500 சதுர மீட்டர் பரப்பளவில் முக்கோண வடிவில் மிகப் பிரமாண்டமான புதிய நாடாளுமன்றம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இருக்கின்ற சிறப்பு அம்சங்கள் பற்றி தற்போது நாம் காணலாம். 2 ஆண்டுகள் 5 மாதம் 18 நாட்களில் இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு இருக்கிறது. மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் சுமார் 1272 பேர் அமரும் விதத்தில் இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
உறுப்பினர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக பயோமெட்ரிக்ஸ், டிஜிட்டல் மொழிபெயர்ப்பு சாதனங்கள் மைக்ரோபோன்கள் உள்ளிட்டவை நிறுவப்பட்டிருக்கின்றனர். சபாநாயகர் மீது நாடாளுமன்ற உறுப்பினர்கள் காகிதங்கள் உள்ளிட்டவற்றை வீச முடியாத அளவிற்கு அவருடைய இருக்கை மிக உயரமான இடத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு உறுப்பினரின் இருக்கையிலும் மல்டிமீடியா காட்சி இருக்கிறது.
கேலரிகளில் எங்கு அமர்ந்தாலும் தெளிவாக தெரியும் விதத்தில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஊடகங்களுக்கு ஒட்டுமொத்தமாக 530 இடங்கள் ஒதுக்கப்பட்டு அதிநவீன ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன.
முக்கோண வடிவிலான புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் பிரதான வாயில்களுக்கு அறிவு, சக்தி, கர்மா என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இந்த 3 வாயில்களுக்கு அருகே இந்திய வரலாற்றை அறியும் விதத்தில், வெண்கல படங்கள் நிறுவப்பட்டிருக்கின்றன.
மகாத்மா காந்தியின் தண்டி யாத்திரையின் காட்சிகள், சர்தார் வல்லபாய் பட்டேல், அம்பேத்கர் உள்ளிட்டவர்களின் வெங்கல சிலைகள் அனைத்து மாநிலங்களின் ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் உள்ளிட்டவை ஒவ்வொரு வாயிலுக்கு அருகேயும் வைக்கப்பட்டிருக்கின்றன. நிலநடுக்கம் காரணமாக, எந்த விதத்திலும் பாதிக்கப்படாத அளவுக்கு வலிமையாகவும், தொழில்நுட்பங்களுடனும் நாடாளுமன்ற கட்டிடம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றத்தின் உச்சியில் அசோகர் சின்னம் பொருத்தப்பட்டிருக்கிறது.