கொரோனா நோய் தொற்று ஏற்படாமல் தடுத்திட அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்; தமிழ்நாடு உட்பட இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரத்தில் தினசரி பாதிப்பு 20 பேர் என்றிருந்த நிலையில் தற்போது தமிழகத்தில் தினசரி பாதிப்பு 1,400-ஐ கடந்துள்ளது. இதனை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், கைகளை கழுவுதல், வாய் மற்றும் மூக்கை மூடியவாறு சரியான முறையில் முகக்கவசம் அணிதல், உரிய நேரத்தில் தடுப்பூசி செலுத்தி கொள்ளுதல் போன்ற தடுப்பு நடவடிக்கைகளை அனைத்து பொது மக்களும் கடைப்பிடிக்க வேண்டும்.
அனைத்து அலுவலகங்களிலும் தெர்மல் ஸ்கேனர் கொண்டு பணியாளர்களை பரிசோதித்த பின் அனுமதிக்க வேண்டும். மேலும், கொரோனா அறிகுறிகள் இருப்பின் அருகிலுள்ள பரிசோதனை மையத்தில் பரிசோதனை மாதிரி கொடுத்து தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். கொரோனா தொற்று பரவுவதை குறைக்க காற்றோட்டமான அறைகளில் பணியாளர்கள் பணிபுரிவதை உறுதிசெய்ய வேண்டும். பொது இடங்களில் முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும். தகுதியுடைய நபர்கள் உரிய நேரத்தில் தவறாமல் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.
எனவே, தருமபுரி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று ஏற்படாமல் தடுத்திடவும், தங்களை பாதுகாத்திடவும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிவதோடு, அரசின் கொரோனா நோய் தடுப்பு பாதுகாப்பு, வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளிட்ட அனைத்தையும் பின்பற்றி கொரோனா நோய் தொற்று பரவல் இல்லாத நிலையினை உருவாக்குவதற்கும், இந்நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கும் அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.