அதிமுகவின் எடப்பாடி பழனிசாமியிடம் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவளிக்குமாறு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கோரவில்லை என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் எதிர்க்கட்சி குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவளிக்குமாறு ராகுல் காந்தி கேட்டதாக ஆங்கில ஊடகம் ஒன்றில் செய்தி வெளியானது. இது முற்றிலும் தவறான செய்தி. ராகுல் காந்தி, எடப்பாடி பழனிசாமிக்கு போனில் அழைத்து பேசி இதுபோன்று எதுவும் கேட்கவில்லை. தமிழகத்தில் திமுகவுடன் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஸ்திரமான நிலையில் உள்ளது. எங்கள் கூட்டணியை பலவீனப்படுத்தும் எந்தவொரு முயற்சியையும் நாங்கள் உறுதியாக இருந்து எதிர்ப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரெளபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா நிறுத்தப்பட்டுள்ளார். யஷ்வந்த் சின்ஹா சமீபத்தில் சென்னை வந்து முதலமைச்சர் முக.ஸ்டாலினிடம் தனக்கு ஆதரவு அளிக்குமாறு கோரினார்.
இதேபோல், திரெளபதி முர்முவும் சென்னைக்கு வந்து அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு ஆதரவு கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.