தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ மூலம் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் நேற்று முன்தினம் தமிழக முதல்வர் காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்பங்கள் பயன் பெற உள்ளனர்.
திட்டத்திற்காக விண்ணப்பித்த பல லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இந்த நிலையில், தமிழக அரசு நிராகரிக்கப்பட்ட செய்வது குறித்த வழிக்காட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பதாரர்களின் தகுதிகள் சரிபார்க்கப்பட்டு, அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளை பூர்த்தி செய்யாத விண்ணப்பங்களும், தகுதியின்மைக்கு உள்ளான விண்ணப்பங்கள் ஏற்கப்படவில்லை.
விண்ணப்பதாரர்களின் விண்ணப்ப முடிவு நிலை குறித்த குறுஞ்செய்தி விண்ணப்பதார்களின் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணிற்கு 18-ம் தேதி முதல் அனுப்பி வைக்கப்படும். இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் போது வங்கி கணக்கு எண் நீங்கள் தவறாக கொடுத்திருந்தால் உங்களுக்கு பணம் வருவதற்கான வாய்ப்பு இல்லை.
எனவே மேல்முறையீடு மூலம் வங்கி கணக்குகளை மாற்ற வேண்டும் என்றால் மேல்முறையீட்டின் போது முகாம்களிலோ, இ-சேவை மையம் மூலமாகவோ அதை நீங்கள் மாற்ற முடியும்.வங்கிக் கணக்குடன் ஆதார் எண், கைரேகை போன்ற விவரங்களை இணைக்காமல் இருந்தாலும் மகளிர் உரிமைத் தொகை வங்கி கணக்கிற்கு வராமல் இருந்திருக்கலாம். எனவே விண்ணப்பதாரர்கள் தங்களது வங்கி கிளைகளுக்கு சென்று கைரேகை பதிவு, ஆதார் எண் இணைப்பு உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்து கொள்ள வேண்டும்.