மதுரை மாநகர் பாஜக தலைவர் டாக்டர் சரவணன், கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பாஜகவினர் நேற்று காலணியை வீசிய சம்பவம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்துப் பேசினார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் சரவணன், பாஜகவில் இருந்து விலகுவதாகவும், பாஜகவின் மத அரசியல் தனக்கு ஒத்துவரவில்லை என்றும் தெரிவித்தார். இனி பாஜகவில் தொடரப்போவதில்லை என தெரிவித்த அவர், சுயமரியாதையுடன் இருக்க விரும்புவதாக கூறினார்.
இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களிலும் டாக்டர் சரவணன் ஈடுபட்டு வருகிறார். எனவே, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் டாக்டர் சரவணன் நீக்கப்படுவதாகவும், பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம்” எனவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.