fbpx

20 நாட்கள் ஆகியும் அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்கப்படாத தீபாவளி ஊக்கத்தொகை…!

20 நாட்களாகியும் அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு இன்னும் வழங்கப்படாத தீபஒளி ஊக்கத்தொகை உடனே வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; தமிழ்நாட்டில் அரசுப் போக்குவரத்து கழகங்கள் உள்ளிட்ட பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்களுக்கு தீப ஒளி திருநாளையொட்டி 20% ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த 10-ஆம் தேதி அறிவித்திருந்தார். அதன் பிறகு இன்றுடன் 20 நாட்கள் ஆகும் நிலையில், இதுவரை அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு தீப ஒளி ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை. அதேபோல், மேலும் பல பொதுத்துறை நிறுவனங்களின் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை இன்னும் வழங்கப்படவில்லை.

உழைக்கும் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதில் அரசு காட்டும் தேவையற்ற தாமதம் கண்டிக்கத்தக்கது. வழக்கத்தை விட நடப்பாண்டில் முன்கூட்டியே ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்ட நிலையில், அதே வேகத்தில் அது வழங்கப்பட்டு விடும் என்று போக்குவரத்துத் தொழிலாளர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால், அவர்களுக்கு ஏமாற்றம் தான் விஞ்சியது. இறுதியாக நேற்று திங்கள் கிழமை தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டிருந்தது.

ஆனால், நேற்று இரவு வரை தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை. தீப ஒளி திருநாளுக்கு இன்னும் இரு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இன்னும் ஊக்கத்தொகை வழங்காமல் தமிழக அரசு தாமதப்படுத்துவன் நோக்கம் தெரியவில்லை. குறித்த காலத்தில் வழங்கப்படாத ஊக்கத்தொகை பயனற்றதாகி விடும் என்பதை அரசு உணர வேண்டும். அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் அனைத்து ஓட்டுனர்களுக்கும், நடத்துனர்களுக்கும் இன்று முதல் தீப ஒளி திருநாள் வரை சிறப்புப்பணி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதனால், தீப ஒளி முடிவடையும் வரை அவர்களால் குடும்பத்தினருடன் சென்று தீப ஒளிக்கு தேவையான புத்தாடைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்குவது சாத்தியப்படாது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு தீப ஒளிக்கான ஊக்கத்தொகையை போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு முன்கூட்டியே அரசு வழங்கியிருக்க வேண்டும். ஆனால், தொழிலாளர்களின் வலிகளை புரிந்து கொள்ள அரசு தவறிவிட்டது. ஒரு நாளுக்கு 12 மணி நேரம் பணி செய்ய சட்டம் கொண்டு வந்த முதலாளித்துவ அரசிடமிருந்து இத்தகைய குறைந்தபட்ச தொழிலாளர் ஆதரவு செயல்பாடுகளை எதிர்பார்ப்பது கூட பாட்டாளிகளின் தவறு தான்.

தீப ஒளி திருநாளுக்கு முழுமையாக நாளைய ஒரு பொழுது மட்டுமே இருக்கும் நிலையில், போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கும், இதுவரை ஊக்கத்தொகை வழங்கப்படாத பிற பொதுத்துறை நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கும் இன்றைக்குள் தீப ஒளி ஊக்கத்தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும். அதுமட்டுமின்றி போக்குவரத்துத் தொழிலாளர்கள் குடும்பத்துடன் சென்று தீப ஒளிக்கான பொருட்களை வாங்குவதற்கு வசதியாக ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பணி இடைவெளி வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

English Summary

Diwali incentive not given to government transport employees after 20 days

Vignesh

Next Post

1500 ஆண்டுகள் பழமையான மாயன் நாகரீக நகரம் கண்டுபிடிப்பு!. 6,674 வீடுகள் மற்றும் கோவில்களின் அதிசயம்!. மெக்சிகோவில் ஆச்சரியம்!

Wed Oct 30 , 2024
Lost Mayan city discovered in southern Mexico jungle

You May Like